search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி களப பூஜை"

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது. இந்த களப பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. இந்த களப பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. முதல் நாளான நேற்று திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர், அகில் போன்றவற்றை நிரப்பி கலசபிறையில் வைத்து மாத்தூர் மடம் தந்திரி சங்கர நாராயணரூ பூஜை செய்தார்.

    அதன்பிறகு களபம் நிரப்பப்பட்ட அந்த தங்ககுடத்தை பஞ்சவாத்தியம், மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த சிறப்பு அபிஷேகத்தை கோவில் தந்திரி சங்கர நாராயணரூ தலைமையில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல், பத்மநாபன் மற்றும் கீழ்சாந்திகள் நடத்தினர். இந்த களப பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார், கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், தென் மண்டல பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    களபாபிஷேகம் முடிந்த பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட களபம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகமும் நடந்தது.

    இந்த ஆடிகளப பூஜை வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும். 11-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் அதிவாச ஹோமம் என்ற பிரமாண்டயாகம் நடக்கிறது.
    ×